நிதியாண்டு மற்றும் அரசியல் அமைப்பிலுள்ள ஏற்பாடுகள் FR 01 to 02
அரச நிதி நடைமுறைகள் Government Financial Regulation
அரசாங்க திணைக்களங்கள், நியதிச் சட்ட சபைகள் ஆகியவற்றையும் அவைபோன்ற நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கடந்த 1992ம் ஆண்டு நிதி ஒழுங்கு விதிகள் Government Financial Regulation இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ளது.
சகல அரச உத்தியோகத்தர்களும் தங்களது அன்றாட அலுவலக கடமைகள், வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைகள், பதவியுயர்வு பரீட்சைகள் போன்ற அனைத்து தேவைப்பாடுகளுக்கும் இதனை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அலுவலக கடமைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் இதற்கான புத்தகங்களை தேடி குறிப்புக்களை தேடி கற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் அதற்கான நேரமும் கிடைப்பதென்பது சாத்தியமற்றது.
இவ்வாறான நிலைகளை கவனத்திற்கொண்டு ஒவ்வொருவரும் தனது கைத்தொலைபேசி (Smart Phone) மூலமாவது ஒருநாளில் ஒருசில நிமிடங்களில் தனக்கு தேவையான விடயங்களை உடனடியாக அறிந்து கொள்ளக்கூடிய வகையில் இத்தளத்தில் அரசின் நிதி நடைமுறைகள் தொடர்ச்சியான வகையில் பதிவேற்றப்படுவதுடன் அக்குறிப்புக்களின் கீழ் அது தொடர்பான வினா விடைகளும் தரப்படுகின்றன.
அரச நிதி நடைமுறைகள் புத்தக முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்
1. இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒழுங்கு விதிகளானது இலங்கை அரசாங்க சனநாயக சோசலிச குடியரசு அரசியல் அமைப்பின் 44(1) (அ) உறுப்புரையில் உள்ள ஏற்பாடுகளின் கீழ் தனக்கு உரித்தளிக்கப்பெற்ற ததுவங்களின் படி ஜனாதிபதி (President) அவர்களினால் நிதி அமைச்சரிடம் (Minister of Finance) குறித்தொதுக்கப்பட்டுள்ளது.
2. நிதி அமைச்சின் செயலாளர் (Secretary of Finance Ministry) திறைசேரியின் செயலாளர் (Secretary of Treasury) ஆவதுடன், திறைசேரியின் பிரதிச் செயலாளர் திறைசேரியின் தலைவர் ஆவார்.
3. ஆரம்பத்தில் திறைசேரி 7 பகுதிகளைக் கொண்டிருந்தது. 1993.01.01 முதல் இப்பகுதிகள் 06 திணைக்களங்களாக தரம் உயர்த்தப்பட்டு அவை ஒவ்வொன்றும் பின்வருமாறு பணிப்பாளர் அதிபதி ஒருவரின் தலைமையில் உள்ளன.
தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களம் (வரவு செலவு திட்டப்பகுதி) Department of National Budget4. வசதி, விரைவு என்பன நோக்கில் அமைச்சுக்களின் செயலாளர்கள் தமது கடிதத் தொடர்புகளை உரிய விடயங்களை கையாளும் திறைசேரியின் பொருத்தமான திணைக்களங்களின் / பகுதிகளின் பணிப்பாளர் அதிபதிகளுக்கு (Director General) அனுப்பி வைத்தல் வேண்டும். அதேபோல் திறைசேரி பகுதிகளின் பணிப்பாளர் அதிபதிகள் செயலாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் திணைக்களங்களின் தலைவர்களும் (Head of the Department) திறைசேரியின் வழிகாட்டுதல்கள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் திறைசேரியின் பொருத்தமான திணைக்களங்கள் / பகுதிகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளலாம்.
அத்தியாயம் I Chapter I
செலவின அரசிறை மதிப்பீடுகள்
பிரிவு- 1 – திரட்டு நிதியமும் செலவினம் திட்டமிடலும், நிகழ்ச்சி நடைமுறைப்படுத்தலும்
பிரிவு -2 – ஆண்டு மதிப்பீடுகளை சமர்ப்பிப்பதற்கான அமைப்பு
பிரிவு-3 – புதிய பிரேரணைகள்
பிரிவு-4 – செலவின மதிப்பீடுகளை தயாரித்தல், சமர்ப்பித்தல், நிறைவேற்றுதல்,
பிரிவு-5 – செலவின மதிப்பீடுகளுக்குச் செய்யப்படும் மாற்றங்கள்
பிரிவு-6 – அரசிறை மதிப்பீடுகள்
அத்தியாயம் I – செலவின அரசிறை மதிப்பீடுகள்
Estimates of Expenditure and Revenue
பிரிவு 1
திரட்டு நிதியமும், செலவினம் திட்டமிடலும் நிகழ்ச்சி முறைப் படுத்தலும்.
Section – 1 The Consolidated Fund and Planning and Programming of Expenditure
நி.ஒ – 1 – நிதி ஆண்டு (Financial Year)குடியரசின் நிதியாண்டு ஒவ்வோர் ஆண்டினதும் ஜனவரி 01ஆம் திகதி தொடங்கி அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தின் 31ம் திகதியில் முடிவடைகின்றது.
நி.ஒ – 2 (1) அரசியல் அமைப்பில் உள்ள ஏற்பாடுகள் (Provisions in the Constitution)திரட்டு நிதியத்தினுள் கொடுப்பனவு செய்தலும் அந்நிதியத்திலிருந்து மீளப்பெறுதலும் தொடர்பில் 1978 ஆம் ஆண்டின் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியல் அமைப்பின் பின்வரும் உறுப்புரைகள் உத்தியோகத்தர்கள் அறிந்திருப்பதற்காகவும் அவர்களுக்கு வழிகாட்டிகளாக அமைவதற்குமாக அவை மீண்டும் தரப்படுகின்றன.
உறுப்புரை 148.
பாரளுமன்றம் (Parliament) பொது நிதி மீது முழுக்கட்டுப்பாட்டையும் வைத்திருக்கும். பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அல்லது ஏதாவது நிகழ்விலுள்ள சட்டத்தின் அதிகாரத்தினால் அல்லது அதிகாரத்தின் கீழ் தவிர ஏதாவது உள்ளூர் அதிகாரபீடமோ ஏதாவது பிற அரசாங்க அதிகாரபீடமோ ஏதாவது வரியை (Tax) அல்லது வீத வரியை அல்லது ஏதாவது பிற விதிப்பை விதிக்க இயலாது.
உறுப்புரை – 149
(1) குறித்த நோக்கங்களுக்காக சட்டத்தினால் ஒதுக்கப்படாத குடியரசின் நிதியங்கள் ஒரு திரட்டு நிதியமாக அமையும். குறித்த நோக்கங்களுக்கு ஒதுக்கப்படாத குடியரசின் வரிகள், விதிப்புகள், வீத வரிகள், தீர்வைகள் வழியிலான சகல வரும்படிகளும் பிற வருவாய்கள், பெறுகைகள் யாவும் இந்தத் திரட்டு நிதியத்துக்குச் செலுத்தப்படுதல் வேண்டும்.
(2) பொதுப்பெறுகடன் மீதான வட்டி, ஆழ் நிதியக் கொடுப்பனவு, திரட்டிய நிதியச் சேகரிப்பு, முகாமை, பெறுகை ஆகியவற்றின் இடை நேர் செலவுகள், விதிப்பணங்கள், செலவினங்கள், ஆகியனவும் பாராளுமன்றம் தீர்மானிக்கக் கூடியதான அத்தகைய பிற செலவினங்களும் திரட்டிய நிதியத்திலிருந்து கொடுக்கப்படும்.
உறுப்புரை – 150(1) இவ்வுறுப்புரையின் (3) ஆம், (4) ஆம், பந்திகளில் வேறுவிதமாக இதற்கெனத் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலன்றி, நிதி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரின் கைச்சாத்துள்ள ஆணைச்சீட்டின் அதிகாரமின்றி திரட்டிய நிதியத்திலிருந்து எத்தொகையையும் மீளப்பெறலாகாது.
(2) மீளப்பெறுதல் நடைபெற வேண்டிய ஆண்டிலேயே, குறிப்பிட்ட அரசாங்க சேவகளுக்கென பாராளுமன்றத்தின் தீர்மானத்தினால் அல்லது ஏதேனும் சட்டத்தினால் குறித்த தொகை வழங்கப்பட்டால் அன்றி அல்லது பிறவாறு சட்டப்படி திரட்டு நிதியத்தின் மீது விதிப்புச் செய்யப்பட்டாலன்றி அத்தகைய ஆணைச்சீட்டுக்கள் வழங்கப்படலாகாது.
(3) நிதியாண்டுக்குரிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சட்டமாக்கப்படுவதற்கு முன்னர் சனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்குமிடத்து, அவர் பாராளுமன்றம் ஏற்கனவே ஏற்பாட்டினைச் செய்திருந்தாலன்றி, புதிய பாராளுமன்றம் கூடுவதற்கு ஆணையிடப்பட்ட திகதியிலிருந்து மூன்று மாதம் முடியும் வரைக்கும் அரசாங்க சேவைகளுக்குத் தேவையெனக் கருதும் அத்தகைய தொகையை திரட்டு நிதியிலிருந்து வழங்குவதற்கும், செலவு செய்வதற்கும் அதிகாரம் அளிக்கலாம்,
(4) சனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு (General Election) திகதி ஒன்றை அல்லது திகதிகளைக் குறிக்குமிடத்து சனாதிபதி, பாராளுமன்றம் அதன் சார்பில் ஏற்கனவே ஏற்பாட்டை செய்திருந்தாலன்றி தேர்தல் ஆணையாளருடன் (Commissioner of Election) உசாவுதல் செய்து அதன் பின்னர் அத்தகைய தேர்தலுக்குத் தேவையெனத் தான் கருதக்க்கூடிய அத்தொகையை திரட்டிய நிதியிலிருந்து வழங்குவதற்கும் செலவு செய்வதற்கும் அதிகாரம் அளிக்கலாம்.
உறுப்புரை – 151
(1) உறுப்புரை 149 இன் ஏற்பாடுகள் எவ்வாறு இருப்பினும் பாராளுமன்றம் அவசரமான, எதிர்பாராத செலவினத்துக்கு ஏற்பாடு செய்யும் நோக்கத்துக்கு எதிர்பாராச் செலவு நிதியம் ஒன்றைச் சட்டத்தின் மூலம் உருவாக்கலாம்.
(2) நிதி விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்:
(அ) ஏதாவது அத்தகைய செலவினத்துக்கு தேவை உள்ளதென,
(ஆ) அத்தகைய செலவினத்துக்கு ஏற்பாடு எதுவும் இல்லையென
திருப்தியுற்றால் சனாதிபதியின் சம்மதத்துடன், எதிர்பாராச் செலவு நிதியத்திலிருந்து முற்பணம் (Advance) ஒன்றின் மேல் அதற்கு ஏற்பாடு செய்வதற்கு அதிகாரம் அளிக்கலாம்.
(3) அத்தகைய முற்பணம் ஒவ்வொன்றினதும் பின்னர் இயன்றவரையில் விரைவாக, அவ்வாறு முற்பணமாக வழங்கப்பட்ட தொகைக்குப் பதிலீடு செய்யும் நோக்கத்துக்கு குறைநிரப்பு மதிப்பீடு ஒன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
உறுப்புரை 152
திரட்டு நிதியத்திலிருந்தோ இலங்கையின் பிற நிதியங்களிலிருந்தோ செலவினங்களை ஒப்பேற்றுதல், அல்லது அச்செலவின் கட்டணங்களை விதித்தல் அல்லது எந்த வரியையாவது விதித்தல், அல்லது நடைமுறையில் உள்ள எந்த வரியையாவது அகற்றுதல், மிகுதியாக்குதல் அல்லது குறைத்தல் ஆகியவற்றுக்கு அதிகாரமளிக்கும் எந்தச் சட்ட மூலத்தையோ பிரேரணையையோ அமைச்சரவையால் (Cabinet) அல்லது அமைச்சரவையால் அதிகாரமளிக்கப்படும் அத்தகைய முறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலன்றி அதனை அமைச்சரைத் தவிர்ந்த பிரதிநிதிகள் சபையில் கொண்டுவர இயலாது.
2. திரட்டிய நிதியத்தில் உள்ள பணம்
Monies in the Consolidated Fund(அ) திரட்டு நிதியமானது குறித்த நோக்கத்திற்காக வேறான நிதியில் போடப்படாத இலங்கைக்குச் சொந்தமான சகல பணத்தையும் கொண்டுள்ளது.
(ஆ) இந்த நிதி (வங்கிக் கணக்கில் உள்ள பணம் அடங்கலாக) பல்வேறு திணைக்களங்களது பணத்தையும் முடிக்குரிய முகவர்களிடையே குடியரசின் அங்கீகரிக்கப்பட்ட கடல்கடந்த பிற முகவர்களிடமும் உள்ள குடியரசின் நிதியையும் கொண்டுள்ளது. அத்துடன் முதலீடுகளும் அதில் அடங்குகிறது.
3. திரட்டு நிதியத்திலிருந்து செய்யப்படும் செலவினம்
Expenditure from the Consolidated Fundதிரட்டு நிதியத்திலிருந்து செய்யப்படும் செலவினத்துக்கான ஏற்பாடு இரண்டு பிரதான வகுதிகளுள் அடங்கும். அவை;
(I) வழங்கற் சேவைகள்:- (Supply Services)ஒதுக்கீட்டுச் சட்டத்தினால் அல்லது பாராளுமன்றத் தீர்மானம் ஒன்றினால் அல்லது அரசியல் அமைப்பின் 150(3) ஆம் உறுப்புரையினதும் 150(4) ஆம் உறுப்புரையினதும் நியதிகளின் படி வழங்கப்பட்ட அதிகாரத்தினால் ஒதுக்கீடு செய்யப்பெறும் சேவைகள் வழங்கற் சேவைகள் எனப்படும்.
(II) விசேட சட்டச் சேவைகள்:- (Specialized Legal Services)அரசியல் அமைப்பின் குறித்த ஏற்பாடுகள் மூலம் அல்லது மேலே உப பிரிவு (I) இல் குறிப்பிட்டவை தவிர்ந்த ஏதாவது பிற சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பெறும் சேவைகள் விசேட சட்டச் சேவைகள் எனப்படும்.
4. விசேட நியதிச் சட்ட நிதியங்கள்:
Special Statutory Funds(I) அரசாங்கத்தினது நிதியளிப்பு முயற்சிகளின் இன்னொரு மூலம் பாராளுமன்றத்தினால் சட்டமாக்கப்பட்ட நியதிச் சட்டங்களின் பிரகாரம் உருவாக்கப்பட்ட விசேட நிதியங்கள் ஆகும். அத்தகைய நிதியங்களுக்கு பணம் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றது என்பதையும் அத்தகைய நிதியங்களிலிருந்து எவ்வாறு நிதி செலவிடப்பட வேண்டும் என்பதையும் சட்டம் விதந்துரைக்கிறது. அத்தகைய நிதியங்கள் பொது மதிப்பீடுகளில் (General Estimate) சேர்க்கப்படுவதில்லை. ஆண்டு மதிப்பீடுகளில் அந்நிதியங்களுக்கெனச் செய்யப்படும் ஏதாவது ஏற்பாடு அந்தந்த தலையங்கங்கள், நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் உதவுத் தொகை அல்லது மானிய வழியில் அமையும்.
(II) அத்தகைய நிதியங்களின் கூட்டாண்மைத் திட்டமும், ஆண்டு வரவு செலவும், அங்கீகாரம் பொருட்டு தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் (National Planning Department), பொதுத் தொழில் முயற்சிகள் திணைக்களத்திடம் அல்லது திறைசேரியினது பொது நிதித் திணைக்களத்திடம் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
(III) அத்தகைய நிதியங்களுக்கு வரவு செலவுத்திட்ட ஆதரவு நாடப்பட்டால், நோக்கம், வரவு செலவுத்திட்ட ஆதரவுத் தொகை, ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் பிரதிகளை பொதுத் திறைசேரியின் வரவு செலவுத்திட்டத்தின் பணிப்பாளர் அதிபதிக்கு, அத்தகைய ஆதரவை நியாயப்படுத்துவதற்கான காரணங்களுடன் அனுப்பி வைத்தல் வேண்டும்.
5. முற்பணக்கணக்கு முயற்சிகள்:
Advance Accounts Activitiesஅரசாங்கத்தின் சில முயற்சிகளுக்கு முற்பணக்கணக்குகள் (Advance Accounts) வழியில் நிதி அளிக்கப்படுகிறது. முற்பணக் கணக்கு முயற்சிகளுக்கான ஒதுக்கீடுகள் (Allocation) பொது மதிப்பீடுகளுக்குப் புறம்பாகச் செய்யப்படுகின்றன. அத்துடன், அவை ஒவ்வொரு முயற்சிகளுக்கும் தனியான ஒரு நிதியமாக அமைகின்றன. ஒவ்வொரு முயற்சிகளுக்குமான வரவு செலவுத்திட்டம், தனித்தனியாகத் தயாரிக்கப்பட வேண்டியதுடன் கணக்குகளும் தனித்தனியாகப் பேணப்படுதல் வேண்டும். முற்பணக்கணக்கு முயற்சிகள் தொடர்புள்ள செலவினத் தலையங்கங்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன.
இனங்காணல் நோக்கங்களுக்கான குறியீடிடல் ஐந்து இலக்க எண்களிட்டுச் செய்யப்படுகின்றன. முதலாவது மூன்று இலக்கங்கள், முயற்சி எந்த அமைச்சின் கீழ் செய்யப்படுகின்றதோ அதன் தலையங்க இலக்கமாக அமையும்.