கடந்த பதிவில் அரச நிதி நடைமுறைகள் Government Financial Regulation நி.ஒ 1, 2 என்பன பதிவேற்றப்பட்டுள்ளன. அத்துடன் நி.ஒ 1, 2 ஆகியவற்றிற்குள் அமைந்துள்ள வினாவிடைகளும் வேறாக பதிவேற்றப்பட்டுள்ளன.
தற்பொழுது நி.ஒ Financial Regulation 3 ம் பிரிவு கீழே வழங்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புபட்ட வினாக்கள் அடங்கிய Online Test கீழேயுள்ளது. முயற்சி செய்து உங்களது திறனை உடன் பரீட்சித்துக்கொள்ளுங்கள்.
நி.ஒ. 3. செலவினம் திட்டமிடுதல் Planning of Exenditure Financial Regulation 3
(1) அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்டு திட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்களாக அமைக்கப்படுதல் வேண்டும். குறித்தவொரு நிதியாண்டுக்கான செலவினத்தின் ஆண்டு மதிப்பீடுகள் அத்தகைய ஆண்டில் அரசாங்கத்தின் முயற்சியின் நிகழ்ச்சித்திட்டங்களது நிதித் தெரிவிப்புக்களாக அமையும். திட்டங்களும் நிகழ்ச்சித்திட்டங்களும் கருத்திட்டங்களை கொண்டுள்ளன.
ஆண்டுச் செலவின மதிப்பீடுகளில் மூலதன கருத்திட்டங்களைக் கூட்டிணைப்பது பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் செய்யப்படும். இதில் ஒதுக்கீடுகள் இரண்டு வகுதிகளின் கீழ் – அதாவது, நடைபெறும் கருத்திட்டம் (தொடருகை) புதிய கருத்திட்டம் என்பவற்றின் கீழ் – காட்டப்படும்.
Financial Regulation 3(2) கருத்திட்டத்தை திட்டமிடுதலும் இரு கட்ட அங்கீகார நடைமுறையும்: Project Planning and the Two Staged Approval Procedure
Financial Regulation 3(2) (I) திட்டமிடுதல் அங்கீகரித்தல் நோக்கத்துக்கு கருத்திட்டங்கள் பின்வருமாறு வகுப்பீடு செய்யப்படுகின்றன.
(அ) துறைசார் திட்டங்கள் – Sectoral Plans
துறைசார் திட்டங்கள் குறித்தவொரு துறையின் பல்வருட (வழக்கமாக 05 வருடம்) நிகழ்ச்சித்திட்டங்களாகும். அவை விடய அமைச்சுக்களினால் அல்லது திணைக்களங்களினால் தேசிய திட்டமிடல் திணைக்களத்துடன் ஆலோசனை மேற்கொண்டும் அதன் உதவியைப் பெற்றும் தயாரிக்கப் படுகின்றன. அவை இரு கட்ட நடைமுறையில் சேர்த்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.
அத்தகைய திட்டங்கள் வழக்கமான புதிய வேலைத் திட்டங்களை (அவற்றில் பல மிகச் சிறியவையாக இருக்கக்கூடும்) இனங்காட்பதற்கான அடிப்படையாக அமையக்கூடும். எனவே அவை பூர்வாங்க அங்கீகாரத்துக்காக, தேசிய திட்டமிடல் திணைக்களம், அபிவிருத்தி செயலாளர்களின் குழு என்பவற்றினூடாக அமைச்ச்ரவையிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
(ஆ) பெரிய கருத்திட்டங்கள் Large Projects
பெரிய கருத்திட்டம் என்பது, தொடக்கச் செலவு 1,00,00,000/= ரூபாவுக்கு குறையாததும் மீண்டுவரும் ஆண்டுத் தொழிற்பாட்டு பராமரிப்புச் செலவு 5,00,000/= ரூபாவை விஞ்சாததுமான ஒரு கருத்திட்டம் ஆகும். அத்தகைய கருத்திட்டங்கள் முழுமையாக இரு கட்ட நடைமுறையினூடாக நிறைவேற்றப்படுதல் வேண்டும். எனினும், துறைசார் திட்டமொன்றின் அல்லது நிகழ்ச்சித்திட்டம் ஒன்றின் ஒரு பகுதியாக இருப்பதும் கடந்த ஐந்து வருடங்களில் அமைச்சரவையின் பூர்வாங்க அங்கீகாரத்தைப் பெற்றதுமான பெரிய கருத்திட்டத்தின் விடயத்தில், அத்தகைய கருத்திட்டம் பூர்வாங்க அங்கீகாரம் பெற்ற கருத்திட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
எனினும், கருத்திட்டங்களை விரிவாக வகுத்தமைக்கும் வேலைகளை ஆரம்பிக்கும் முன்னர் அவை பற்றி தேசிய திட்டமிடல் திணைக்களத்துக்கும், மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அறிவிக்க வேண்டியதுடன் அவற்றின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
(இ) சிறிய கருத்திட்டங்கள்
சிறிய கருத்திட்டங்கள் என்பவை, மூலதனச் செலவு 1,00,00,000/= ரூபாவுக்குக் குறைவாக உள்ளனவும் மீண்டுவரும் தொழிற்பாட்டு பராமரிப்புச் செலவு ஆண்டு ஒன்றுக்கு 5,00,000/= ரூபாவுக்கு குறைவாக உள்ளனவுமான கருத்திட்டங்களென வரையறை செய்யப்பட்டுள்ளன. கருத்திட்டம் ஒன்றை கருத்திட்டமாக வகுப்பீடு செய்யும் நோக்கத்துக்கு தனியான கூறுகளாகப் பிரிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
கருத்திட்டமானது அங்கீகரிக்கப்பெற்ற துறைசார் திட்டமொன்றின் ஒரு பகுதியாக இல்லாதிருந்தால் சிறிய கருத்திட்டங்கள் இருகட்ட நடைமுறையின் இரண்டு சட்டங்களூடாகவும் நிறைவேற்றப்பட வேண்டிய தேவையில்லை. அது வழக்கமான முறையில் அபிவிருத்தி செயலாளர்கள் குழுவின் பூர்வாங்க அங்கீகாரத்துக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். அத்தகைய அங்கீகாரம் வழங்கப்பட்டதும் கருத்திட்டமானது பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்.
(II) கருத்திட்டத்தின் திட்டமிடலானது பின்வருங் கட்டங்களூடாக நிறைவேற்றப்படுதல் வேண்டும்.
(அ) இனங்காணல்
(ஆ) பூர்வாங்க மதிப்பீடு,
(இ) பூர்வாங்க அங்கீகாரம் (கோட்பாட்டளவிலான அங்கீகாரம்)
(ஈ) தயாரித்தல்,
(உ) முழுமையான மதிப்பீடு,
(ஊ) இறுதி அங்கீகாரம் (இறுதிச்சுற்று அங்கீகாரம்),
(எ) பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்திற் சேர்த்தல்,
(ஏ) வரவு செலவுத்திட்டத்திற் சேர்த்தல்,
(ஐ) செயற்படுத்தல்,
(ஒ) மதிப்பீடு செய்தல்,
Financial Regulation 3(III) இருகட்ட அங்கீகார நடைமுறை: Two Stage Approval Procedure
கருத்திட்டங்களின் இரு கட்ட அங்கீகார நடைமுறையானது தொடக்க நிலை அங்கீகாரத்தையும் இறுதி நிலை அங்கீகாரத்தையும் கொண்டுள்ளது.
(அ) தொடர்புள்ள திணைக்களம் அல்லது அரசாங்க நிறுவனம் சாத்தியமான உதவி நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் கருத்திட்டத்தினை இனங்கண்டு முன்னிலைச் சாத்தியவள அறிக்கையைத் தயாரிக்கும்.
(ஆ) அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஆதரவளிக்கும் அமைச்சானது கருத்திட்டத்தினை தொடக்க நிலை அங்கீகாரப்படிவத்தில் தேசிய திட்டமிடல் திணைக்களத்திடமும் அபிவிருத்திச் செயலாளர்கள் குழுவிடமும் சமர்ப்பிக்கும்.
(இ) தேசிய திட்டமிடல் திணைக்களம் தொடக்கநிலை மதிப்பீடு ஒன்றைச்செய்து அபிவிருத்திச் செயலாளர்கள் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.
(ஈ) அபிவிருத்திச் செயலாளர்கள் குழுவானது, தேவை ஏற்பட்டால், பிற அமைச்சுக்களுடன் உசாவுகை செய்து கருத்திட்டத்தை தொடக்க நிலை அங்கீகாரத்துக்காக அமைச்சரவைக்கு விதந்துரைக்கும்.
(உ) அமைச்சரவையின் தொடக்கநிலை அங்கீகாரம் வழங்கப்பட்டதும் கருத்திட்டத்தின் முன்னிலைச் சாத்தியவள அறிக்கை ஆதரவளிக்கும் அமைச்சுக்கு அனுப்பப்படும். தேவை ஏற்பட்டால், அது வெளிநாட்டு வளத் திணைக்களத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.
(ஊ) அதன் பின்னர் ஆதரவளிக்கும் அமைச்சானது திணைக்களத்துடன் / அரசாங்க நிறுவனத்துடன் சேர்ந்து சாத்தியவள ஆய்வு ஒன்றினை மேற்கொண்டு, உதவி நன்கொடையாளர்களின் அனுசரணையுடனும் உள் ஒழுக்காற்றுக்குழு ஏதுமிருந்தால் அதனுடனும் உசாவுகை மேற்கொண்டும் கருத்திட்டத்தினை வகுத்தமைத்து அதனை இறுதி அங்கீகாரப்படிவத்தில் அபிவிருத்திச் செயலாளர்களின் குழுவிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
(எ) கருத்திட்டத்தின் இறுதி மதிப்பீட்டினை தேசிய திட்டமிடல் திணைக்களம் மேற்கொண்டு அபிவிருத்தி செயலாளர்களின் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்.
(ஏ) அபிவிருத்தி செயலாளர்கள் குழுவானது, கருத்திட்டப் பிரேரணையை இறுதி மதிப்பீட்டு அறிக்கையுடன் பரிசீலனை செய்து, தொடர்புள்ள பிற அமைச்சுக்களின் ஆலோசனையுடன், அமைச்சரவைக்கு விதந்துரைக்கும்; அமைச்சரவை இறுதி அங்கீகாரத்தை வழங்கும்.
(iv) திட்டமிடற் கூறு Planning Unit
ஒவ்வொரு அமைச்சிலும் திட்டமிடற் கூறு ஒன்று அமைக்கப்படுதல் வேண்டும். திட்டமிடற் கூறின் பிரதான பணிகள் பின்வருமாறு.
(அ) நீண்டகால, இடைநிலைக்கால துறைசார் திட்டங்களை தயாரித்தல், மீளாய்வு செய்தல், செயற்படுத்துதல், குறிக்கோள்கள், திறமுறைகளை அமைத்தல், துறைசார் திட்டமிடலில் தேசிய திட்டமிடல் திணைக்களத்துடன் கூட்டிணைவு பெறுதல்.
(ஆ) துறைசார் திட்டவமைப்புக்களின் பணிச்சட்டகத்தினுள் புதிய கருத்திட்டங்களை இனங்கண்டு தயாரிப்பதோடு அவற்றின் பொருளியல் மதிப்பீட்டையும் சுற்றாடல் மதிப்பீட்டையும் மேற்கொள்ளுதல்.
(இ) துறைசார் திட்டவமைப்புக்களின் பணிச் சட்டத்தினுள் (பொருத்தமான விதத்தில்) விலைகள், உதவிப்பணங்கள், மாற்றக் கொடுப்பனவுகள் போன்றவை அடங்கலாக சகல வகையான பொருளாதாரக் கொள்கைகளையும் அவற்றின் சமூக விளைவுகளையும் பரிசீலனை செய்தல்:
(ஈ) உள்ளூர் மக்கள் தொகையினர் மீது துறைசார் திட்டவமைப்புக்களதும் கருத்திட்டங்களதும் சமூக பாதிப்புகளைப் பரிசீலனை செய்தல்;
(உ) அமைச்சினது நீண்டகால, இடைநிலைக்கால குறிக்கோள்களதும் அரசாங்க முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்திலுள்ள இலக்குத் தொகைகளதும் ஒழுங்கில் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளின் தயாரிப்பில் அமைச்சின் நிதி உத்தியோகத்தருடன் கூட்டிணைத்தல்; அத்துடன் இம் மதிப்பீடுகளை தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்துடன் கூட்டாகப் பரிசீலனை செய்தல்;
(ஊ) கருத்திட்டத்தை கண்காணித்து முன்னேற்றத்தைத் திட்டமிடல், பிரச்சினைகளை இனங்காணல், தாமதங்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பரிகார நடவடிக்கையை ஆரம்பித்தல்;
திட்டம் செயற்படுத்தல் அமைச்சின் முன்னேற்றக் கட்டுப்பாட்டுப் பகுதியுடன் கூட்டிணைப்புப் பெறுதல்.
(எ) மாவட்ட திட்டமிடற் கூறுகளும் ஏனைய திட்டமிடற் கூறுகளும் அடங்கலாக உப தேசிய மட்டத்திலும் மாவட்ட – மட்ட திட்டமைப்புக்களுடனும் அமைச்சினதும் முயற்சிகளைக் கூட்டிணைத்தல்;
(ஏ) திட்டமிடல் வடிவங்கள் அனைத்துக்கும் போதுமான தரவுகள் அவசியமாக இருப்பதனால் நல்ல புள்ளிவிபர அடிப்படை ஒன்றை, குடிசன மதிப்பு, புள்ளிவிபர திணைக்களத்துடன் இணைந்து உருவாக்குவதும் அவசியமானது;
(ஐ) இலங்கையிலும் வேறிடங்களிலும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் அடங்கலாக அத்துறையில் சர்வதேச, தேசிய அபிவிருத்திகளுக்கிணங்க நாளதுவரை நிலையினை பேணுதலும் அதன் விளைவுகள் பற்றி மதியுரை வழங்குதலும்;
(ஒ) துறைசார், கருத்திட்டத் திட்டமிடலினதும் பொருளியல் சமூக செயலாற்றுகையினதும் சகல அம்சங்களும் பற்றி செயலாளருக்கு மதியுரை வழங்குதல்,