அரச நிதி ஒழுங்கு விதிகள் தமிழ் (Financial Regulation Tamil) தொடரில் 01 தொடக்கம் 03 வரையான நிதி ஒழுங்கு விதிகள் ஏற்கனவே பதிவேற்றப்பட்டுள்ளன. தற்பொழுது 04 வது ஒழுங்கு விதி பதிவேற்றப்படுகின்றது. நிதி ஒழுங்கு விதி 05 அரசினால் வெளியிடப்படவில்லை.
நி.ஒ – 4 செலவினத்தின் நிகழ்ச்சித் திட்டமிடல் The Programming of Expenditure
(1) பாராளுமன்றத்தினால் ஆண்டு மதிப்பீடுகளில் அதிகாரமளிக்கப்பெறும் நிதியங்கள் நிதி ஆண்டின் போது சாதித்து முடிக்கக்கூடிய நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரதும், கணக்கீட்டு உத்தியோகத்தரதும் பொறுப்பாகும்.
(2) செயற்படுத்துவதற்கான நிகழ்ச்சி திட்டமிடலானது, கருத்திட்டங்கள் வகுத்தமைக்கப்படும் போது இயல்பாகவே செய்யப்படுதல் வேண்டும். எப்படியாயினும் அது செலவினத்தின் நிதி ஆண்டு ஆரம்பிக்கும் முன்னர் செய்யப்படுதல் வேண்டும். தொடர்புள்ள ஆணைப்பத்திரம் வழங்கப்படும் வரையில் நிதி உறுதியளிப்போ கடன் பொறுப்போ எதுவும் செய்யப்படலாகாது. ( நி.ஒ 90 ஐ பார்க்க).
(3) மீண்டுவரும் செலவினம் தொடர்புற்ற சாத்தியவள ஆய்வுகள் வரவு செலவு திட்டமிடலுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் செலவினமும் முன் மதிப்பீடு செய்யப்படுதல் வேண்டும்.
மீண்டுவரும் செலவினத்தின் இலக்குகள், பயன்கள், குறிக்கோள்கள் ஆகியன செலவினத்தை முறையற்ற விதத்தில் விரிவு படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்காக தெளிவாக வரையறை செய்யப்படுதல் வேண்டும். விரயத்தை நீக்கிச் சிக்கனத்தைத் துல்லியமாகச் செயற்படுத்துவதற்கான வழிநெறிகள் கைக்கொள்ளப்படுதல் வேண்டும்.
நெருக்கமான கண்காணிப்பு, வகை கூறவேண்டிய பொறுப்பு, ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் தாபனத்தை அமைத்தல் வேண்டும். இந்த நோக்கத்துக்கு ஒவ்வொரு கருத்திட்டத்தினது நோக்கமும் செலவு விடய வகுப்பும் பொருத்தமான சிறு கூறுகளாக அல்லது அங்கங்களாக பிரிக்கப்படலாம்.
(4) மூலதன கருத்திட்டங்கள் முறைப்படி அங்கீகரிக்கப்படும் போது செயற்படுத்தும் முகாமையானது விரிவான மொத்தச்செலவு மதிப்பீட்டைத் தயாரித்தல் வேண்டும். அதில் நிதியளிப்பு மூலங்கள் காட்டப்பட வேண்டியதுடன் நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துவதற்கான கால அளவுகளும் காட்டப்படுதல் வேண்டும்.
ஒவ்வொரு கருத்திட்டமும், செலவு விடய வகுப்பும் கண்காணிப்பு, முன்னேற்றக் கட்டுப்பாடு போன்றவற்றுக்கு உதவும் வகையில் விடயங்களாக வேலைகளாக, சிறப்பு பணிகளாக முயற்சிகளாக அல்லது ஏதாவது பிற வசதியான செலவுக் கூறுகளாகப் பகுக்கப்படலாம். செயற்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு கூட்டுத் தொகுதிப் பகுப்பாய்வு போன்ற பொருத்தமான தொழிநுட்பம் பயன்படுத்தப்படலாம்.
(5) நிகழ்ச்சி முறைப்படுத்தப்பட்டபடி பயன் எய்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு செயற்படுத்தல் முகாமையிலும் முன்னேற்ற / கண்காணிப்புக் குழு ஒன்று அமைக்கப்படுதல் வேண்டும். இந்த நோக்கங்களுக்குக் குழுவானது பிறவற்றுள்:
(அ) கருத்திட்டங்களை வேலைகள் சிறப்பு பணிகள், முயற்சிகள், போன்ற பகுப்பு விபரங்களிற் பேணுதல் வேண்டும்.
(ஆ) முன்னர் தீர்மானித்த இலக்கு தேதிகளின் படி முன்னேற்றத்தை பதிவு செய்தல் வேண்டும்,
(இ) முன்னேற்றத்தை தாமதிக்கக்கூடிய பொருள்கள், ஆளணியினர் அல்லது அமைப்பு தொடர்பில் புறக்கட்டுப்பாடுகளை இனங்காண எத்தனிப்பதுடன் உரிய நேரத்தில் பரிகார நடவடிக்கைகளையும் எடுத்தல்.
வேலை மதிப்பீட்டு முறைகளைப் படிப்படியாகத் தொகுத்தல், ஆகுசெலவு அலகுகளை வகுத்தமைத்தல் ஆகியன குழுவினது கடமைகளில் முக்கிய பகுதியாக அமையும். அத்துடன் குழு கணக்கீட்டு உத்தியோகத்தருக்கும், பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கும் ஒழுங்காக அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்.
திணைக்கள வேலைத்திட்டங்களின் குறித்த அம்சங்களை பூர்த்தி செய்வதில் பிற திணைக்களங்கள் சம்பந்தப்படும் போது அத்தகைய பிற திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், குழுவின் உறுப்பினர்களுக்காகவும் ஒத்து தேர்ந்தெடுக்கப்படலாம். இது சம்பந்தப்பட்ட செயலாளர்களுடன் உசாவுகை மேற்கொண்டு செய்யப்படுதல் வேண்டும்.
(6) பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் விரிவான செலவினத் திட்டமிடல் மீது பொது மேற்பார்வையைப் பிரயோகிக்க வேண்டியதுடன் தேவையானவிடத்து பல திணைக்களங்களது முயற்சிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கூட்டிணைத்தல் வேண்டும்.
(இல 5 இன் கீழ் நிதி ஒழுங்கு விதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.)